ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகள் மீது 100 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க மருந்துச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசுடன் ‘மிகவும் விருப்பமான நாடு’ (Most Favored Nation – MFN) என்ற அடிப்படையில் மருந்து விலை குறைப்பு ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களுக்கும், அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளைத் தொடங்கி உற்பத்தியை மேற்கொள்ளும் (Onshoring) நிறுவனங்களுக்கும் இந்த வரியிலிருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விலக்கு அளிக்கப்படும்.
விலையில் சமரசம் செய்யாமல் அமெரிக்காவில் உற்பத்தி மையங்களை மட்டும் உருவாக்கும் நிறுவனங்களுக்கு 20% வரி விதிக்கப்படும். 4 ஆண்டுகளில் ரேட் குறித்த டீல் போடவில்லை என்றால் வரிகள் 100% ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்களின் இறக்குமதியால் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்த வரிகள் அவசியமானவை என இந்த உத்தரவில் கையெழுத்திடும் போது டிரம்ப் குறிப்பிட்டார்.
பெரிய மருந்து நிறுவனங்களுக்கு 120 நாட்களும், மற்ற நிறுவனங்களுக்கு 180 நாட்களும் இதற்காக வழங்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். ஏற்கனவே சுமார் 17 மருந்து நிறுவனங்கள் இது தொடர்பாக டிரம்ப் அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறதாம். அதில் 13 நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பாதிப்பா?காப்புரிமை பெற்ற (Patented) மருந்துகள் மீது 100% வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தும் இந்திய நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாகும். அதிர்ஷ்டவசமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பெரும்பாலான மருந்துகள் ஜெனரிக் (Generic) எனப்படும் சாதாரண மருந்துகளாகும். இந்த வரி விதிப்பிலிருந்து ஜெனரிக் மருந்துகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு பெரிய நிம்மதி.
