மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மீது நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியதால் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் சூழல் நிலவியது. ஹார்முஸ் நீரிணை வழியாக எரிவாயு மற்றும் எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் கட்டுப்பாடுகள் விதித்ததால், உலகளவில் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈரானுடன் தற்போது மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால் தாக்குதல் முடிவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்கு மிக நெருக்கமாக வந்துவிட்டதால், திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதலை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அந்நாட்டு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளைகுடா நாட்டுத் தலைவர்களின் மீதான மரியாதையின் காரணமாக, ஈரான் மீது நடத்த இருந்த தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் ராணுவத் தளபதிகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடன் எட்டப்பட உள்ள புதிய உடன்பாட்டில் முக்கியமாக “ஈரான் எக்காரணம் கொண்டும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது” என்ற நிபந்தனை கண்டிப்பாக இடம் பெறும் என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
“குண்டுமழை பொழியாமல் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால், ஒருவேளை இந்தச் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த நொடியே ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் கடல்சார் தடைகளை அமெரிக்க மத்தியக் கட்டளை (CENTCOM) தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை 85 வணிகக் கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் திசைதிருப்பப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
