மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமான நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில்  இருந்து புறப்பட்ட எதிஹாட் (Etihad) விமானம் திங்கட்கிழமை இரவு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இந்த விமானத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி விமான நிலையத்தின் முனையம் 3-ல் காத்திருந்த உறவினர்கள், பயணிகள் வெளியே வந்ததும் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர்.

சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர மார்ச் 3-ம் தேதி (இன்று) 10 சிறப்பு நிவாரண விமானங்களை இயக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாலும், போர் பதற்றத்தாலும் மார்ச் 3-ம் தேதி மட்டும் சுமார் 158 சர்வதேச விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கான தனது விமான சேவைகளை மார்ச் 3 நள்ளிரவு வரை ஏர் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளுக்கான சேவைகளை மாற்றுப் பாதையில் தொடர்ந்து இயக்கி வருகிறது. அபுதாபியில் இருந்து வந்த பயணிகள், வளைகுடா வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை நேரில் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். போர் காரணமாக வான்வெளி மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் விமானங்கள் பெரும் தாமதத்தைச் சந்தித்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version