இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கட்கிழமை (நேற்று) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றார். காசா போர் நிறுத்தத் திட்டத்தின் சிக்கலான இரண்டாம் கட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது, டொனால்ட் டிரம்ப், போர்க்கால சூழலில் நாட்டை வழிநடத்தி சிறப்பான செயல்பாட்டைக் காட்டிய பிரதமர் என பெஞ்சமின் நெதன்யாகுவை வெளிப்படையாகக் கௌரவித்தார்.
பெஞ்சமின் நெதன்யாகுவைப் புகழ்ந்து பேசிய டிரம்ப், “அவர் மிகவும் ஆபத்தான மற்றும் வேதனையான ஒரு காலகட்டத்தில் இஸ்ரேலை வழிநடத்தினார். அந்தக் காலகட்டத்தில் தவறான பிரதமர் பதவியில் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்று கூறினார். நெதன்யாகு, டிரம்ப்பின் அருகில் நின்று புன்னகைத்துத் தலையசைத்துக் கொண்டிருந்தார்.
காசா போர் நிறுத்தத் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல வேண்டுமானால், ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் கூறினார். இதை அமைதி செயல்முறைக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும் அவர் விவரித்தார்.
டிரம்பின் மாரா-லாகோ ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு, இந்த ஆண்டில் அமெரிக்காவில் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த ஐந்தாவது சந்திப்பாகும். இதற்கிடையில், போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தை இஸ்ரேலும் ஹமாஸும் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறார்கள் என்ற கவலை சில வெள்ளை மாளிகை அதிகாரிகளிடையே உள்ளது.
இந்தச் சந்திப்பு நெதன்யாகுவின் கோரிக்கையின் பேரிலேயே நடைபெற்றது என்று டிரம்ப் கூறினார். அறிக்கைகளின்படி, ஜனவரி மாதம் பாலஸ்தீனிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஒரு அரசாங்கத்தையும், காசாவிற்கு சர்வதேச நிலைப்படுத்தல் படையை (ISF) அனுப்புவது குறித்தும் டிரம்ப் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.
டிரம்பை சந்திப்பதற்கு முன்பு, புளோரிடாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோருடனும் நெதன்யாகு பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன் கூறுகையில், நெதன்யாகுவின் முக்கிய நோக்கம் ஹமாஸின் ஆயுதநீக்கமும், காசா பகுதியை முழுமையாக ஆயுதமற்றதாக மாற்றுவதுமாக இருக்கும் என்றார். மேலும், மத்திய கிழக்குக்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவிற்கும் கடும் சவாலாக உள்ள ஈரானின் அச்சுறுத்தல் விவகாரத்தையும் நேதன்யாகு முன்வைப்பார் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹமாஸின் ஆயுதப் பிரிவான இஸெடின் அல்-காசம் பிரிகேட்ஸ், திங்கட்கிழமை அன்று தாங்கள் ஆயுதங்களைக் கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “ஆக்கிரமிப்பு தொடரும் வரை, எங்கள் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள், மேலும் தங்கள் ஆயுதங்களைக் கைவிட மாட்டார்கள்,” என்று அது ஒரு காணொளிச் செய்தியில் தெரிவித்துள்ளது. ஹமாஸின் நீண்டகால செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா இறந்துவிட்டதையும் ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 30 அன்று காசாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
