குளிர்காலம் வந்தாலே சரும வறட்சி, உதடு வெடிப்பு, மந்தமான செரிமானம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் அழையா விருந்தாளியாக வந்துவிடும். இந்த சவால்களை எதிர்கொள்ள விலை உயர்ந்த பொருட்களைத் தேடுவதற்குப் பதிலாக, நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் ஒரு இயற்கையான பொருளே தீர்வாக அமையும் என்றால் நம்பமுடிகிறதா?
நமது பாரம்பரிய தேங்காய் எண்ணெய், அதன் வியக்கத்தக்க ஆரோக்கியப் பண்புகளுடன், குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும். இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களை (MCTs) இது கொண்டுள்ளது. குளிர்காலத்தில் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்காக தேங்காய் எண்ணெயை எதற்காக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
ஈரப்பதத்தை தக்கவைக்கிறது: தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்புகளுக்காக பெயர்பெற்றது. குளிர்காலத்தில், குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்பட்டு, வறட்சி, அரிப்பு மற்றும் செதில் போன்ற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தேங்காய் எண்ணெய் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (Medium-Chain Fatty Acids), குறிப்பாக லாரிக் அமிலம் (Lauric Acid) ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இவை சருமத்திற்குள் ஊடுருவி ஆழமான நீரேற்றத்தை வழங்குகின்றன என 2018ம் ஆண்டு வெளியான NCBI ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேங்காய் எண்ணெயை தினசரி மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்துவது சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இதை முகம், கை மற்றும் உடலில் நேரடியாகப் பயன்படுத்தலாம் அல்லது கூடுதல் ஊட்டச்சத்துக்காக பாடி க்ரீம்களுடன் சேர்க்கலாம். இதன் இயற்கைப் பாதுகாப்பு அடுக்கு கடுமையான குளிர்காலக் காற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது, வெடிப்புகள் மற்றும் எரிச்சலைத் தடுக்கிறது.
வீக்கத்தைக் குறைக்கிறது: தேங்காய் எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குளிர் காலநிலையால் ஏற்படும் சிறிய வெட்டுக்கள், சிராய்ப்புகள் மற்றும் எரிச்சல்களைக் குணப்படுத்த உதவுகிறது. எக்ஸிமா அல்லது psoriasis போன்ற தோல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, தேங்காய் எண்ணெய் வீக்கமடைந்த சருமத்தை ஆற்றுவதோடு, சிவப்பைக் குறைக்கவும் உதவுகிறது. குறிப்பாக உதடு வெடிப்பு, சொர சொரப்பான முழங்கைகள் மற்றும் கால்களில் உள்ள வறண்ட திட்டுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இது பொதுவான குளிர்காலச் சருமப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் உடலில் மோனோலாரின் (Monolaurin) என்ற கலவையாக மாற்றப்படுகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்காக அறியப்படுகிறது என்கிறது NIH ஆய்வு. தேங்காய் எண்ணெயை உணவில் சேர்ப்பது அல்லது சமையலுக்குப் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும்.
ஸ்மூத்தி அல்லது வெந்நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து குடிப்பது, உடலின் இயற்கைப் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும். இதன் லேசான வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குளிர்காலத்தில் நோய்த்தொற்றுகளின் தீவிரத்தை குறைக்க உதவும்.
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மட்டுமல்ல, செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTs) நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களை விட எளிதில் செரிக்கப்படுகின்றன. இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.
சமையலில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது குடல் செயல்பாட்டை மேம்படுத்தலாம் மற்றும் உணவுப் பழக்கம் மாறும் குளிர் மாதங்களில் பொதுவாக ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளைத் தடுக்கலாம். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்துகிறது.
முடி பராமரிப்பு: குளிர்கால வறட்சி சருமத்தை பாதிப்பது போலவே, முடியையும் பாதித்து, எளிதில் உடைவதற்கும் உடையக்கூடியதாகவும் மாற்றுகிறது. தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை கண்டிஷனராகச் செயல்படுகிறது, உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளித்து வறட்சியைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து உச்சந்தலையில் மசாஜ் செய்வது பொடுகைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பளபளப்பைப் பராமரிக்கவும் உதவும்.
