நாம் அன்றாடம் உண்ணும் உணவில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நிறைய இடங்களில் கேட்டு இருப்போம். உண்மையில் ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொண்டால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேறும். தேன் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தும். உடல் சக்தி அதிகரிக்கும் மற்றும் தூக்கம் மேம்படும். இவ்வாறு பல நன்மைகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்.
ஆனால் ஒரு ஸ்பூன் தேன் உருவாவதற்கு 12-14 தேனீக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் உழைத்தாக வேண்டும். சுமார் 12-14 தங்களது வாழ்நாள் முழுவதும் உழைத்து தேன் சேகரித்தாலும் அவர்களால் ஒரு ஸ்பூன் தேன் மட்டும்தான் சேகரிக்க முடியும். ஆராய்ச்சியின் முடிவு இப்படித்தான் கூறுகிறது.
ஒரு தேனீயின் வாழ்நாள் காலம் குறைந்த பட்சம் 4 முதல் 6 வாரங்கள் மட்டும் தான் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ராணி தேனி குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து ஆண்டு காலம் வரை வாழும். அவை ஒரே நாளில் 2000 முட்டைகளை கூட இடும் அளவுக்கு ஆற்றல் பெற்றது.
மனித இனத்திற்கு மிகவும் பயனுள்ள பூச்சி தேனி என்று யுனெஸ்கோ அங்கீகாரம் கொடுத்துள்ளது.தேனீக்கள் உலக உணவு உற்பத்தியில் 70%-க்கு மேலான விளைச்சலை நேரடியாக அதிகரிக்கின்றன. உலகில் தேனீக்கள் இல்லை என்றால் 100 இல் உள்ள 70 பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஒரு தேன் கூட்டில் அதிகபட்சமாக 20,000 முதல் 80,000 தேனீக்கள் வரை இருக்கும். மலை இடுக்குகளில் இருக்கும் பெரிய தேன் கூட்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் தேனீக்கள் கூட இருக்கலாம். மேல் கூறியபடி நாம் உண்ணும் தேனின் பின்னணியில், தேனீக்கள் எவ்வளவு தூரம் உழைக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அதிக வெப்பம், வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் உபயோகிப்பது மற்றும் காற்று மாசு காரணமாக பல இடங்களில் நம்மால் தேனீக்களை காண கூட முடிவதில்லை. இந்த நிலைமை மாறவேண்டும். உணவுச் சங்கிலி சரியான அளவில் நம்முடன் பயணிக்க நாமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பதிவின் மூலம் நாங்கள் கூற வரும் கருத்து.
