ஆரோக்கியமான நோயற்ற வாழ்க்கையை பெற நினைப்பவர்கள், அன்றாடம் சில ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், ஒவ்வொரு நாளையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் 7 ஆரோக்கிய பழக்க வழக்கங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
1) தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது காலை / மாலை நடைப்பயிற்சியாகவோ, அல்லது காலை நேர ஸ்ட்ரெட்சாகவோ கூட இருக்கலாம். இப்படி செய்வதன் மூலம், நாள் முழுக்க உடல் புத்துணர்வோடு இருக்கும்.
2) தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக சாப்பிட்டு முடித்தபின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வருவது, உணவின் அளவை கட்டுப்படுத்துவதுடன் செரிமானத்துக்கும் உதவும்.
3) எக்காரணத்தை கொண்டும் உணவை தவிர்க்கக்கூடாது. மூன்று வேளை உணவு சாப்பிடுவது மட்டுமன்றி, அடிக்கடி ஹெல்த்தி ஸ்நாக்ஸ் உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். அந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், பாதாம் போன்றவை இருப்பது நல்லது.
4) அன்றாடம் சரும பராமரிப்பை உறுதிசெய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது சன்ஸ்க்ரீன், மாய்ஸ்சரைசர் தேய்ப்பது, வீட்டுக்கு வந்தவுடன் ஃபேஸ்வாஷ் அல்லது சோப் போட்டு முகத்தை நன்கு கழுவுவது என்றிருக்க வேண்டும்.
5) இரவு படுக்கைக்குச் செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்பே செல்போன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். முடிந்தவரை டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தின் பயன்பாட்டையும் படுக்கைக்கு முன்னரே தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் ஆழ்ந்த தூக்கத்தை உறுதிசெய்ய முடியும்.
6) தினமும் முடிந்தவரை 8,000 அடிகளாவது நடக்க வேண்டும். புதிதாக நடைப்பயிற்சியை தொடங்குபவர்களுக்கு, ஒரேடியாக ஒரேநாளில் 8,000 அடிகள் நடப்பது உடல் உபாதைகளை கொடுக்கும் என்பதால், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இலக்கை அடையலாம்.
7) இரவில் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூக்கம் என்பது உடலுக்கான ஓய்வு மட்டுமல்ல, மனதுக்குமான ஓய்வுதான். பொதுவாக இரவில் நன்கு தூங்குபவர்கள், மறுதினம் பணியில் உற்சாகமாக இருப்பார்கள் என்பதால் தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்.
