மழைக்காலம், குளிர்க்காலம் அல்லது லேசாக வானிலை மாறினால் போதும் அழையா விருந்தாளியாக சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை நம்மை தொற்றிக்கொள்ளும். வானிலை மாறும்போது இவை ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த பிரச்சனையால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படும் சூழல் உருவாகும்.
எனவே, இதில் இருந்து உடனடி நிவாரணம் பெற மருந்துகளை பலரும் நாடிச்செல்வார்கள். ஆனால், நம் வீடுகளில் உள்ள சில இயற்கை பொருட்களை வைத்து செய்யும் சில வீட்டு வைத்தியங்கள், சளி, இருமல், தொண்டை கரகரப்புக்கு உடனடி நிவாரணம் தரும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஆவி பிடிப்பது: சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனை என்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் முதலில் சொல்வது ஆவி பிடி என்பது தான். குளிர் மற்றும் மழைக்காலத்தில், மூக்கடைப்பு, தொடர் இருமல் போன்ற பிரச்சனைகள் கண்டிப்பாக வந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில், கொதித்த நீரில் யூகிலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை மாலை என இரு வேலை செய்து வந்தால் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள் பால்: தினசரி இரவு படுக்க செல்வதற்கு முன், பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து குடிப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை பலரும் அறிந்ததே. இதற்கு காரணம் மஞ்சளில், குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து மழைக்காலத்தில் தினமும் குடித்து வர, தொண்டைக் கரகரப்பு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
மூலிகை டீ: குளிர் மற்றும் மழைக்காலத்தில் சூடான மூலிகை டீ குடிப்பது உடலுக்கு இதமாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரில் துளசி, பட்டை, மஞ்சள், ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தேன் – இஞ்சி: எளிமையாக நம் வீட்டில் கிடைக்கும் தேன் மற்றும் இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற நம் முன்னோர்களால் இது அதிகம் பயன்படுத்தப்பட்டது.
இஞ்சி, சளியை இறுக்கமடையச் செய்வதோடு, தொண்டை எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தொண்டை வலியை போக்க தேன் உதவி செய்கிறது. இஞ்சியை அரைத்து அதன் சாற்றை எடுத்து அதனுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் காலை மாலை என இரண்டு வேளை இதனை உட்கொள்ள வேண்டும்.
கசாயம்: சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் கசாயம் செய்து குடிப்பது சிறந்தது. அதற்கு, உரலில் இஞ்சி துண்டு, 6 மிளகு, 3 கிராம்பு, 2 துண்டு பட்டை, 1 கைப்பிடி துளசி, கொஞ்சமாக புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில், 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி , அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். பின், வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். மழைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. இல்லையென்றால், சளி, இருமல் பிடிக்கும் போது செய்து குடிக்கலாம்.
