குளிர்காலம் என்றாலே மாலை நேரத்தில் சுட சுட டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது சகஜம் தான். அந்த ஆசையை நிறைவேற்ற வீட்டில் வடை, பஜ்ஜி, சிப்ஸ் என செய்து சாப்பிடுவதும் வழக்கம் தான். ஆனால், எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு முறை இந்த மைசூர் போண்டாவை செய்து பாருங்கள்.

வடை, பஜ்ஜியை போல் செய்வதற்கு சுலபமாக இருக்கும் இந்த போண்டா, சாப்பிடுவதற்கு வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும். காரசாரமான சட்னியுடன் இந்த போண்டாவை தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். அப்புறம் என்ன யோசனை? மைசூர் போண்டாவின் சுவையை அனுபவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை பின்பற்றி ஒரு முறை செய்து பாருங்க.

மைசூர் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

  • புளித்த மோர் – 1கப்
  • மைதா – 1 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • வெங்காயம் – 1/4 கப்
  • துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
  • நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • சீரகம் – 1/2 டீஸ்பூ
  • பேக்கிங் சோடா – 1/8 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 10 இலைகள்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – 1/2 டீஸ்பூன்

மைசூர் போண்டா செய்வது எப்படி?

  • ஒரு பாத்திரத்தில் மோர், உப்பு, பேக்கிங் சோடா, சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
  • அடுத்ததாக மைதா மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து விடவும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பினையவும். (மாவு தளர்ந்து இருப்பது சரியான பதம்)
  • பின்னர், ஒன்றரை டேபிள் ஸ்பூன் கொதிக்கும் எண்ணெய்யை சேர்த்து மெல்ல மெல்ல கலந்து, மூடி போட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து விடுங்கள்.
  • 30 நிமிடங்களுக்கு பின்னர், மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அதனால் தண்ணீரை கொஞ்சமாக மாவில் தெளித்து லேசாக தளர்த்தி விடவும்.
  • இதற்கிடையில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொஞ்சமாக மாவை எடுத்து எண்ணெய்யில் போடவும்.
  • ஒரு புறம் வெந்து வந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக மாறியதும் எடுத்தால் அவ்வளவு தான் போண்டா ரெடி.
டிப்ஸ்:
  • மைதா வேண்டாம் என்பவர்கள் விருப்பத்திற்கேற்ப கோதுமை மாவில் செய்யலாம்.
  • அதிகமான தீயில் போண்டா சுட்டால் மாவு வேகாது.

போண்டாவை தொட்டு சாப்பிட சட்னி வேண்டாமா? மைசூர் போண்டாவுக்கு ஏற்ற சட்னியை 2 நிமிடங்களில் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் தேங்காய், 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை, சின்ன துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

இப்போது சட்னியை தாளிக்க..ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் சேர்த்தால் சுவையான சட்னி ரெடி. அவ்வளவு தான்..காரசாரமான சட்னியில் நாம் செய்து வைத்த சுட சுட மைசூர் போண்டாவை தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும். ட்ரை பண்ணி பாருங்க.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version