இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் முக்கிய காரணம். ஆனால் சில உணவுகளை சாப்பிட்டால், கொலஸ்ட்ராலை எளிதில் வெளியேற்றலாம். அதில் தக்காளியும் ஒன்று. இது சமையலில் சுவையை இரட்டிப்பாக்குவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.தக்காளியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தக்காளியை தினமும் சாப்பிடுவதால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நமது அன்றாட சமையலில் சில முக்கியமான காய்கறிகள் அவசியம் இருப்பவை. அவற்றில் தக்காளி முக்கியமானது. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறியாக தக்காளி உள்ளது. அதனால்தான் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் தக்காளியை வாங்குகின்றனர். தக்காளியை கொண்டு சாலட், பழச்சாறுகள் மற்றும் சூப்கள் போன்றவற்றை செய்கின்றனர்.புரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் நிறைந்துள்ளதாக கிளீவ்லேண்ட் கிளினிக் தெரிவிக்கிறது. மேலும், தக்காளியில் கொழுப்பு குறைவாக உள்ளது. தக்காளி ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. அனைத்து வகையான தக்காளிகளையும், அதாவது, பச்சையாகவோ அல்லது பழுத்ததாகவோ சாப்பிட்டு வந்தால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்று கிளீவ்லேண்ட் கிளினிக்கின் டாக்டர் சிமோன் கூறியுள்ளார்.தக்காளி சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறையின்றன மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது. மழைக்காலத்தில் தக்காளி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தக்காளியில் லைகோபீன் நிறைந்து உள்ளது. லைகோபீன் என்பது இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தக்காளி ஆனது உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு தக்காளி சிறந்த மருந்தாக உள்ளது. எனவே தக்காளி சாற்றை தினமும் குடிப்பது கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.நிபுணர்களின் கூற்றுப்படி, கருவுறாமையைத் தடுப்பதிலும் தக்காளி பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் தக்காளியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளி விதைகளில் ஆக்சலேட்டுகள் இருப்பதால் சிறுநீரக கல் நோயாளிகளை இன்னும் மோசமாக்கும்.பல ஆய்வுகளின்படி, தக்காளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், மழைக்காலத்தில் தக்காளியை சாப்பிடுவதால் நோய்த்தொற்றுகள் குறையும். முக்கியமாக தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. தக்காளியை தினசரி சாப்பிடுவதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸை குறைக்கிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கலான வீக்கம், திசு சேதம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது.