மனிதர்களான நாம் அனைவரும் நிச்சயமாக 90 வயது முதல் 95 வயது வரை நல்ல ஆரோக்கியத்துடன் அதே சமயம் இளமையாகவும், நலமாகவும் வாழ முடியும் என்று பெல்ஜியத்தைச் சேர்ந்த முதுமை தொடர்பான அறிவியல் ஆய்வாளர் எரிக் வெர்டின் கூறியுள்ளார். சராசரியாக மக்கள் 60 முதல் 75 வயது வரை தான் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்று நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மனது வைத்தால் 90 முதல் 95 வரை சீரான நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எந்த வயதானாலும் சரி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முறையான விஷயங்களை ( உடற்பயிற்சி செய்வது, சிறந்த சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது ) செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறியுள்ளார்.
நல்ல ஆரோக்கியத்துடன் என்றும் இளமையுடன் வாழ மிக முக்கியமான கூறாக பார்க்கப்படுவது நல்ல தெளிவான மனநிலை தான். எந்தவித குழப்பமும், மனசு சோர்வும் இன்றி நம்பிக்கையுடன் மன நிம்மதியுடன் வாழ தொடங்க வேண்டும்.

மனிதனின் உடலில் ஆரோக்கியம் நிலையாக இருக்க, தூக்கம் நிலையாக இருக்க வேண்டும். குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை ஒருவர் நன்கு உறங்க வேண்டும். அன்றாடம் குறைந்தது 15 முதல் 30 நிமிடம் வரை சிறிய உடற்பயிற்சி ( நடப்பது, மாடிப்படி ஏறி இறங்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற சுறுசுறுப்பான உடற்பயிற்சிகள் ) செய்வது, யோகாசனம் செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி நம் உடல் வயதாவதையும் குறைக்கவும் இவை கை கொடுக்கும்.

குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை கைவிட்டு நல்ல சத்துமிக்க ஆகாரங்களை உண்பது நம் உடல் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து உடைய நல்ல காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்களை நம் உணவு முறையில் சேர்த்துக் கொள்வது அவசியம். முடிந்தவரை ஒரு நாளில் – 24 மணி நேர கால இடைவேளையில் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் உணவை உண்டுவிட்டு, மீதமுள்ள 16 முதல் 15 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மனிதனுக்கு ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் முக்கியமான ஒன்றாக இருந்து விட முடியாது. எனவே உங்கள் ஆரோக்கியத்தை இன்றிலிருந்து மேம்படுத்தி, நீண்ட நாட்கள்களுக்கு நல்ல ஆரோக்கியமான, சந்தோஷமான மற்றும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ தயாராகுங்கள்.
