தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பாகி வரும் சூழலில் எடப்பா பழனிசாமி திடீரென டெல்லிக்கு விசிட் அடித்திருப்பது கவனத்தை ஈர்த்தது.

தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவுக்குள் பல மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் பனிப்போராக வெடித்த சூழலில் திடீரென கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்ற சசிகலா, ஒபிஎஸ், தினகரன் என அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இதற்காக 10 நாட்கள் கெடு தருவதாக அறிவித்தார்.

செங்கோட்டையன் இப்படி அறிவித்த அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு திரும்பிய செங்கோட்டையன், தமிழகத்தின் அரசியல் சூழலை எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

அது மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் விலகினார். இதற்கிடையே பிரதமர் சந்திக்க நேரம் வழங்காததால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியிலிருந்து விலகினார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு துணை குடியரசு தலைவர் பொறுப்பேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து கூற உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக தலைவர்கள் டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கதவை தட்டுவது தொடர்ந்து தொடர்கதையாகி வருவதால் திராவிட கட்சியான அதிமுக தன்னை டெல்லியிடம் அடமானம் வைக்கிறதோ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் தங்களை காத்து கொள்வதற்காக அதிமுக தலைவர்கள் டெல்லியின் கண் சிமிட்டலுக்கு தலையை ஆட்டி பொம்மை அரசியலை செய்தனர். அதே ஒரு சூழல் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிப்பதாகவும் அரசியல் விமர்சனமாக கூறப்படுகிறது.

ஜெயலிதா என்ற ஆளுமையால் தனித்துவமாக எந்தவித நெருக்கடிக்கும் சாய்ந்து போகாமல் இருந்த அதிமுக தற்போது இவர்களின் அச்சத்தாலும், ஆளுமையின்மையாலும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் மக்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version