அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரில் அதிமுக உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அடையாள அட்டைகளை சாலையோரத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
சேலம் மாநகர் சூரமங்கலம் ஒன்றாவது பகுதி செயலாளராக உள்ள மாரியப்பன் திமுகவினருடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை எனவும், அடிப்படை பிரச்சனைகளுக்காக பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கும் தடை போடுவதாக அவர் மீது கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அதிருப்தியடைந்த அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டைகளை சத்திரத்தில் இருந்து செவ்வாய்பேட்டை செல்லும் ரயில்வே மேம்பாலத்தின் அருகே வீசி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சேலத்தில் முகாமிட்டுள்ள நிலையில் சொந்தக் கட்சி உறுப்பினர்களே தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக தங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.