இன்ஜின் இல்லாத ரயில் என அதிமுகவை கலாய்த்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றும், அதிமுக புல்லட் ரயில் போல வேகமாக இயங்கி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்பமனு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழக முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வரைவோலை (டிடி) கொடுக்கப்பட்டு விருப்பு மனு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி ஜெயக்குமார், கோகுல இந்திரா, கேபி முனுசாமி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதற்கும், முன்னாள் அமைச்சர்கள் அவரவர் போட்டியிடுவதற்கான விருப்பு மனுவை பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பமுனு விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தொண்டர்களின் எழுச்சி தெரிகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை வழி நடத்துவது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் என்றும் அதிமுக புல்லட் ரயில் அதுக்கு இன்ஜினை தேவையில்லை என்று கூறினார்.
இன்ஜின் இல்லாத கார் அதிமுக என்று குறிப்பிட்ட உதயநிதியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டெக்னாலஜி வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியவில்லை எனவும் சாடினார். வேகமாக சென்று கொண்டிருக்கின்ற அதிமுக இயக்கத்தை அப்டேட் இல்லாத உதயநிதி சொல்வது அவரையே கேவலப் படுத்திக் கொள்ளக்கூடிய விஷயம் தான் என்று விமர்சித்துள்ளார்.
