சோழிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிக்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, எம்ஜிஆர் பிரதான சாலை திறந்தவெளித் திடலில் பிரச்சாரம் செய்தார்.

இதில் தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் அவருக்கு மலர்க்கொத்துகளையும், பொன்னாடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.

அப்போது தொண்டர்கள் சிலர் நடிகர் அஜித் மற்றும் இபிஎஸ் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஃப்ரேம் செய்து அவருக்கு பரிசளித்தனர். அதனை இபிஎஸ் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் காணப்பட்டன. இதனையடுத்து விரைவில் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறும் என்று பலரும் கூறிவந்தனர். அதன்பிறகு அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அதிமுகவில் இருந்த செங்கோட்டையனும் தற்போது தவெகவில் இணைந்து விட்டார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு அஜித் படம் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version