கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கோவை ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு மாணவர்கள் 117 பேருக்கு, கோவை எம்பி மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்று வழங்கிய சைக்கிள்கள், சரியாகப் பொருத்தப்படாமலும், சில உதிரிபாகங்கள் இல்லாமலும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், இப்படி தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டுகளிலும், இது போன்ற தரம் குறைந்த சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த முடியாமல், தங்கள் சொந்த செலவில் பழுது பார்த்தும், பல மாணவர்கள் அவற்றை விற்பனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக கோவை மாவட்டத்தில் இதே பிரச்சினை தொடர்கிறது. இந்த சைக்கிள் ஒப்பந்ததாரர்கள் யார்? ஏன் தொடர்ந்து தரம் குறைந்த சைக்கிள்கள் கோவை பள்ளி மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன?
கோவையில் மட்டும் இந்த ஆண்டு, 17,782 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் 4 ஆயிரத்து 300 ரூபாய் விலை என்று திமுக அரசால் கூறப்படும் சைக்கிள்கள், இப்படி அடிப்படைக் குறைபாடுகளைக் கூட சரிசெய்யாமல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே, அனைத்து சைக்கிள்களும், தர பரிசோதனை நடத்திய பின்னரே வழங்கப்பட வேண்டும் என்றும், தரம்குறைந்த சைக்கிள்கள் வழங்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
