மதுரையில் 21-ம் தேதி நடைபெறவுள்ள த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜய்யின் தவெக முதன் முதலாக தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்,

வரும் 21-ம் தேதி மதுரையில் தவெக மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக பாரபத்தியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ”200 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது.

மாலை 3.15 மணிக்கு தொடங்கும் மாநாடானது இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீசார், 42 கேள்விகள் கேட்டு விளக்கம் அளிக்கக் கூறி இருந்த நிலையில், தவெக சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. மாநாட்டில் 1.20லட்சம் ஆண்கள், 25,000 பெண்கள், 4,500 முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்வார்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் 1.5லட்சம் நாற்காலிகள், 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள், 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்.இ.டி திரைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் 420 ஒலிப்பெருக்கிகள், 20,000 மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன. அதேப் போல, தொண்டர்கள் உள்ளேயும், வெளியேயும் செல்வதற்கு 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கேட்டு சுகாதாரத்துறையிடம் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. தனியார் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு மாநாட்டு பணியில் ஈடுபடுத்தப்படும்.
12 அவசர கால வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது” என த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version