கட்சி தொடங்கிய உடனே லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என்று உலகத்தையே தாண்டுவோம் எனக் கூறும் விஜய், ஒரு தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்கட்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் இன்று (நவ.27) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “1977 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த செங்கோட்டையன், அமைச்சராகவும் பல்வேறு பணிகளை செய்து வந்தவர். அது மட்டுமின்றி, அதிமுகவிலிருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பதவிகளையும் பெற்றவர். 50 வருடத்திற்கு பிறகு தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுக தனக்கென ஒரு வாக்கு வங்கி உள்ள கட்சி. அதில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த கட்சிக்கே அந்த வாக்குகள் விழும். ஒருவேளை அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் பிரிந்து சென்றால், அதிமுக வாக்கு தவெகவுக்கு போகுமா? என்றால் அது கேள்விக்குறி. தேர்தலுக்கு பிறகு தான் அவர்களது பலம், பலவீனத்தை சொல்ல முடியும். இதுவரை அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அன்புக்குரிய தம்பி விஜய் இப்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார். எடுத்த உடனேயே லாங் ஜம்ப், ஹை ஜம்ப் என உலகத்தை தாண்டுவோம் என்று டயலாக் சொன்னால் எப்படி? ஒரு தேர்தலில் நின்று செல்வாக்கை, பலத்தை நிரூபித்து விட்டு, வெற்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் ஒத்துக் கொள்ளலாம். அதேபோல, எம்.ஜி.ஆர் வேறு விஜய் வேறு. எம்ஜிஆரை வைத்து தான் அந்த காலத்தில் திமுக இருந்தது என்பதை மறக்கக் கூடாது. எம்ஜிஆர் புரட்சித்தலைவராக வந்து கட்சியைத் தொடங்கினார், தம்பி விஜய் தற்போது நடிகராக தான் உள்ளார்.
அதிமுகவில் இருக்கும் போது பாஜகவை நம்பி தான் இருந்தோம் என செங்கோட்டையன் சொல்வதை ஏற்க முடியாது. செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால், அவர் ஏன் தவெகவிற்கு சென்றார்? அப்படி போக வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை நான் பேசினால் சரியாக இருக்காது. எங்களது கூட்டணி விவகாரம் குறித்து தான் நாங்கள் பேச முடியும். தமிழகத்தில் மூன்றாவது, நான்காவது என எத்தனை அணி உருவானாலும், 2026 தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தான் வெல்லும். அதே போல, ஜனவரி 15 வரை டைம் உள்ளது. அதற்குள் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்ல, அனைவரையும் ஒருங்கிணைப்போம்” என்றார்.
