2026 தேர்தலில் வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்பதே நமது இலக்கு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும், அன்னதானம் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

49-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”இந்த நிகழ்ச்சியில் நான் யாரையும் வாழ்த்த வரவில்லை, உங்களின் வாழ்த்துக்களை பெற வந்துள்ளேன். எனது பிறந்த நாளில் என்னை அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்று, அவருடைய (சேகர்பாபு) பிறந்தநாள் அன்றும், என்னை அழைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனது பிறந்தநாளான இன்று திராவிட மாடல் அரசின் சாம்பிளாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனது பிறந்த நாளில் இன்று காலை எழுந்தவுடன் கலைஞர், அண்ணா, மற்றும் பெரியார் நினைவிடங்களில் வணங்கி விட்டேன். இன்னும் எனது தந்தை மற்றும் தாயை வணங்கவில்லை, அதற்கு முன்பாக தொண்டர்களான உங்களை பார்த்து உங்களை வாழ்த்துகளை பெற வேண்டும் என்று இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் உங்களின் வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். 2026 தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. நமது இலக்கு ‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’. அதுவே எனது பிறந்தநாள் வேண்டுகோள் செய்தி” என பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version