புதுச்சேரியில் சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமிக்கும் – துணைநிலை ஆளுநருக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டபோது நாங்கள் போராடினோம். அதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமி ரசித்தார். தற்போது முதல்வரான ரங்கசாமிக்கு அதே நிலை வந்துள்ளது.

காங்கிரஸில் இருந்து பாஜக சென்ற எட்டப்பர் ஆளுநரை சந்தித்து முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் அவர் ராஜினாமா செய்தால் அடுத்த முதலமைச்சர் நீங்கள் தான் என கூறியவுடன் அந்த எட்டப்பர் துணைநிலை ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்து திரும்பியுள்ளார்.

சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் முதல்வருக்கு ஒரு பிரச்சனை அல்ல ஆறு மதுபானத் தொழிற்சாலைக்கு ரூ. 90 கோடி கைமாறியது. 100 மதுபான கடைகள் திறக்க முடிவு எடுத்தனர். இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் சென்றன. இதனை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் ராஜிநாமா செய்யப்போவதாக ஆளுநரை மிரட்டும் வேலையை ரங்கசாமி ஆரம்பித்தார். அது பிசுபிசுத்து போய்விட்டது.

ராஜினாமா செய்ய போவதாக கூறிய ரங்கசாமி இப்போது துணைநிலை ஆளுநரிடம் சரண்டர் ஆகிவிட்டார்.
ஆளுநரை எதிர்த்து எங்களது ஆட்சியை நாங்கள் ராஜினாமா செய்தோம். ஆனால் தற்போது பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் நாடகமாடி மக்களை ஏமாற்றுகின்றனர். அது மக்களிடம் எடுபடாது. ஒரு நிமிடம் கூட முதல்வர் நாற்காலியை ரங்கசாமி விடமாட்டார். முதலமைச்சர் நாற்காலிக்காக எது வேண்டுமானாலும் செய்வார். ஆனால் இவரது மிரட்டல் எல்லாம் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் செல்லாது.

திரைப்படத்தில் ரஜினி சொல்வது போல புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமிதான் மாப்பிள்ளை. ஆனால் போடுகின்ற சட்டை பாஜகவினுடையது. இவர் டம்மி முதலமைச்சர்,
மாநில அந்தஸ்தை முதல்வர் ரங்கசாமியால் வாங்க முடியாது. மத்திய அரசு தராது. முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார். பாஜக அவரை சிறையில் தள்ளும் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version