கோவையில் கல்லூரி மாணவி கொடூர கூட்டு வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நேற்றிரவு 11 மணியளவில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 3 இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். தாக்குதலால் காயமடைந்த இளைஞர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

புகாரைத் தொடர்ந்து மாணவியை தேடிய போலீஸார், அவரை நிர்வாணமான நிலையில் மீட்டுள்ளனர். அவரை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். மாணவியும், தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவாக வட மாநிலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடப்பதுண்டு. இப்போது போதைப் பொருள் நடமாட்டம், காவல் துறை மீது குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமை போன்ற காரணத்தால் தமிழகத்திலும் பாதுகாப்பு இல்லாத சூழல் பெருகி வருகிறது. பரபரப்பான பகுதிகளான அண்ணா பல்கலைக்கழகம் முதல் கோவை விமான நிலையம் வரை பெண்களுக்கு இந்த அட்சியில் எங்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதை நினைத்து காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதுடன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version