மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கிடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில், அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ஆகவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தால்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “அரசியல் கட்சியினரை வழக்கில் சேர்த்து கருத்துக்களை கேட்காமல் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் வைத்தாலும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் முறையான அனுமதி பெற்றே வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “தனியார் நிலத்தில் சிலை வைக்க அனுமதி தேவை இல்லை என உத்தரவுகள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் தனியார் நிலத்தில் கொடிக்கம்பங்களை வைக்க மட்டும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. அதோடு அரசியல் கட்சிகளை சேர்க்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதோடு, பொதுநல வழக்கில் மட்டுமே இது போல உத்தரவை பிறப்பிக்க இயலும். ஏற்கனவே இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா? என்பது தொடர்பாக முடிவு செய்ய தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
