பாமக தலைவர் அன்புமணி மீது டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல் நிலையத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரின் மகனும் பாமக தலைவருமான அன்புமணி ஆகியோரிடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இருவரின் பிரிவு காரணமாக பாமகவில் இரு தரப்பாக பிரிந்து நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் பாமக தங்களுக்கு சொந்தமானது என ராமதாஸ் தரப்பினர் அளித்த மனு மீது பதிலளித்த இந்திய தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவர் அன்புணி தான் என அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ் தரப்பினர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்தநிலையில், டெல்லியில் நாடாளுமன்ற சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி மீது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
பாமக கவுரவ தலைவர் ஜி.கே மணி அளித்துள்ள புகாரில், தேர்தல் ஆணையத்தில் அன்புமணி போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
