ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவரின் 118வது
ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் ஆளாக தனி விமான மூலம் பசும்பொன் வந்தடைந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவரின் நினைவிடத்தை பார்வையிட்ட பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதிக்கான தலைவர் அல்ல, அவர் ஒரு பற்றற்ற பண்பாளர்” என பேசினார். தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்த வருகை தருவதாகவும், துணை குடியரசு தலைவராக பதவியேற்ற பின் தமிழகம் வரும் முதல் நிகழ்வு என்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும் தேவருடைய விழா மட்டுமல்லாது அனைத்து தியாகிகளின் விழாக்களையும் அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
