திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா, நடப்பாணடு கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுவது வழக்கம். 1985 முதல் இந்த முப்பெரும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இது 40-வது ஆண்டு முப்பெரும் விழாவாகும். 1985 முதல் 2003 வரை சென்னையில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், கோவை, நெல்லை, திருச்சி, நாகர்கோவில், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு இம்முறை கரூர் அந்த சிறப்பை பெற்றுள்ளது.
விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். பின்னர் கார் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்று அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் கரூர் சென்றடைய உள்ளார்.
முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
கோட்டை வடிவில் விழா முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைககள் போடப்பட்டுள்ளன. விழாவையொட்டி கரூர் மாநகரே களைகட்டி உள்ளது.
முப்பெரும் விழாவின் வரலாறு
1949, செப்டம்பர் 17: பேரறிஞர் அண்ண திமுகவைத் தொடங்கினார். தொடக்கத்தில், பெரியாரைப் போற்றும் வகையில் கட்சிக்குத் தலைவர் பதவி இல்லை; பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகள் மட்டுமே இருந்தன. 1957: தி.மு.க. ஒரு அரசியல் கட்சியாகத் தேர்தலில் களமிறங்கியது. முதல் தேர்தலிலேயே 15 சட்டமன்ற இடங்களையும், 2 நாடாளுமன்ற இடங்களையும் பெற்றது.
1967: தி.மு.க. தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்தது. இது கட்சியின் 18 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 1969: அண்ணாவின் மறைவுக்குப் பின், கலைஞர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1974: தி.மு.க.வின் வெள்ளி விழா ஆண்டைக் குறிக்கும் வகையில், கலைஞர் முப்பெரும் விழாவை அறிமுகப்படுத்தினார். இது பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், மற்றும் தி.மு.க. தொடங்கிய நாள் ஆகிய மூன்று முக்கிய தினங்களை ஒருங்கிணைத்துக் கொண்டாடப்பட்டது. இந்த முதல் முப்பெரும் விழா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது.
1985: முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களில் விருதுகளை வழங்க கலைஞர் திட்டமிட்டார். 1999: தி.மு.க.வின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது கலைஞர் தமிழக முதலமைச்சராக இருந்தார். விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
2018: தளபதி மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, முப்பெரும் விழாவில் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டது. 2024: தி.மு.க.வின் பவள விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அப்போது தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கிறார். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 அக்டோபர் 21 முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முரசொலி செல்வம் பெயரில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு அந்த விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
தி.மு.க.வின் வெள்ளி விழா (1974), பொன் விழா (1999), மற்றும் பவள விழா (2024) ஆகிய மூன்று முக்கிய மைல்கற்களிலும் கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தி.மு.க.வின் தொடர்ச்சியான அரசியல் வெற்றியைப் பிரதிபலிக்கிறது.