மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலில் தமிழ்நாடு முழுக்க வெற்றிகரமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடந்து வருகின்றன. மக்கள் தங்களது குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்று வருகின்றனர்.
வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மக்கள் மருத்துவ வசதிகளை அவர்கள் பகுதிகளிலேயேப் பெற உதவும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களை தமிழ்நாடு முழுவதற்கும் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
திராவிட மாடல் அரசின் இந்த முன்னெடுப்புகள் மக்களிடம் பெற்றுவரும் மகத்தான ஆதரவைப் பார்த்து வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் அற்ப வேலைகளில் இறங்கியிருக்கிறார் பழனிசாமி.
நீதிமன்றத்தை நாடி இத்திட்டங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தக் கூடாது தடைவிதிக்க வேண்டும் என சின்ன புத்தியோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறது அதிமுக.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மினிக் கிளினிக் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடியவர்கள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் பெயரைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த முன்னாள் முதலமைச்சர்களின் படங்களைப் பயனபடுத்தக் கூடாது என்று கூறுவதன் மூலம் பேரறிஞர் அண்ணாவிற்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தங்களுடைய தலைவர்களுக்கும் சேர்த்தே துரோகம் இழைத்துள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பெயர் மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரலில் கலந்திருக்கிறது. அப்பெயரை தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது.
