2026 சட்டமன்ற தேர்தல் வேலைகளை திமுக ஏற்கனவே தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக குழு நியமித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்டங்களை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தமிழகம் முழுவதும் மண்டல பொறுப்பாளர்கள் தேர்தல் சம்பந்தமாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளராக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நிர்வாகிகளுடன் ஆ.ராசா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தெற்கு, தென்மேற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, மற்றும் காஞ்சிபுரம் வடக்கு ஆகிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து நாளை (22.05.2025) முதல் ஜூன் 10-ம் தேதி வரை கலந்துரையாட உள்ளனர்.
குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் கலந்துரையாடலில், நிர்வாகள் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர செயலாளர்கள், வட்ட, பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர்செயலாளர்கள், தலைமைச்செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்வதற்கு, மாவட்ட கழகச் செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
