தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கூட்டணி கட்சிகள் விழிப்புடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அதிமுக மற்றும் நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
