பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல்களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாதக கட்சிகள் பிரச்சாரத்தையும், மக்கள் சந்திப்பையும் தொடங்கியுள்ளனர். இதேநேரம், கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே மோதல் ஏற்பட்டதால் இருவரும் மாறி மாறி டெல்லி சென்று மத்திய உள்துறை அமித்ஷாவை சந்தித்து பேசினர். இவர்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இப்படி தேர்தலை ஒட்டி தமிழக அரசியல்களம் விறுவிறுப்பாகி வரும் சூழலில், பாஜக தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அரசியல் சுற்றுப்பயணமாக இருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. நைனார் நாகேந்திரன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கு ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version