சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

கூட்டணியை பொறுத்தவரை, ஏறத்தாழ 5,6 தேர்தல்களில் முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் தலைமையிலான, கூட்டணி வலுவாக இயங்கி வருகிறது. எந்தவித சலசலப்பும் இல்லை. மோடி, அமித்ஷா என பலரும் இந்தக் கூட்டணியை சிதறடிக்க பல முயற்சிகளை செய்து வருவதாகவும், அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு உறுதியாக இருக்கும் கொள்கை கூட்டணி தான் இந்த கூட்டணி.

செல்வப் பெருந்தகை, முத்தரசன், திருமாவளவன் , வைகோ உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் இதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு காது செவிடாக இருக்கும் என்று நினைக்கிறேன் அவர்கள் பேசியதை காதில் வாங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக கூட வருவதற்கான நிலை இல்லாததால், அவர் ஏதேதோ செய்து பார்க்கிறார். நிச்சயமாக திமுக கூட்டணி 200 க்கும் மேல் வெற்றி பெறும்.

ஓரணியில் தமிழ்நாடு துவங்கி 10 நாட்களுக்குள், 1 கோடி உறுப்பினர்களைத் தாண்டி விட்டது. இந்திய அரசியல் கட்சி வரலாற்றில் எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத பெருமையை தேடியிருக்கிறது. இந்தக் கூட்டணி இருக்கும் காரணத்தினால் தான் மக்களுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது வலுவான கூட்டணி.

இதை பார்த்து பாஜகவுக்கு வயிற்றெரிச்சல். அவர்கள் பக்கம் வீக்காகி விட்டது. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கிறார். கூட்டணி ஆட்சி தான் அதிமுக முதலமைச்சர் தான் என்று சொன்னாரே தவிர, எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லவில்லை.

ஏற்கனவே பாமகவை பிரித்து விட்டார்கள். அடுத்து அதிமுகவை பிரிப்பார்கள். இது பாஜகவுக்கு கைவந்த கலை. திமுக கூட்டணி பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாது. பாஜக அதிமுக கூட்டணி குறித்து யாருக்கு பயம்? அவர் தானே எல்லோரையும் அழைக்கிறார். அப்படியானால் அவருக்கு தானே பயம் திமுக கூட்டணியை பிரிக்க மோடியாலே முடியாது இவரால் முடியுமா?

எங்களைப் போல கூட்டணிக்கு மரியாதை கொடுக்கும் தலைவர்கள் யாரும் கிடையாது. கேட்டுப்பாருங்கள் மற்ற தலைவர்களை. கூட்டணி தலைவர்களை கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும் என்ற அண்ணாமலையின் பேச்சு குறித்து, அண்ணாமலையே எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version