திமுக-பாஜக இடையே இப்போதும் மறைமுக உறவு தொடர்ந்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்களின் இதயங்களிலும் அவர் வாழ்ந்து வருகிறார்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல முக்கிய மாநில உரிமைகள் தாரைவார்க்கப்பட்டன. காவிரி நதிநீர் விவகாரமாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பறிபோன அந்த உரிமைகளுக்காக துணிச்சலாக குரல் கொடுத்து, அவற்றை மீட்டெடுத்துக் காட்டியவர் ஜெயலலிதா” என்று புகழாரம் சூட்டினார்.

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதிமுக என்பது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம். எல்லோரும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அதேசமயம், கோயில்களில் காலங்காலமாக என்ன மரபுகள் (ஆகம விதிகள்) பின்பற்றப்படுகிறதோ, அந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து கூற இயலாது” என்று கூறினார்.

இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் ஜெயக்குமார் வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தது குறித்துக் கேட்ட போது, “நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது. திமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே இப்போதும் ஒரு மறைமுக உறவு, எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும்.

ஒரு படத்தில் தியேட்டர் லைசென்ஸ் வாங்குவதற்காக, அதிகாரி முன்னால் ‘கலெக்டரா இருந்தாலும் விடமாட்டேன்’ என்று வெளியே கவுண்டமணி வீரவசனம் பேசுவார். ஆனால், உள்ளே சென்றதும் அதிகாரியின் காலில் விழுந்து, ‘ஐயா எப்படியாவது லைசென்ஸ் கொடுத்துடுங்க’ என்று கெஞ்சுவார்.

அதுபோலத் தான் திமுகவும் செயல்படுகிறது. ‘நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம், நீங்கள் அழுவது போல் அழுங்கள்’ என்பது தான் திமுக, பாஜக இடையிலான ஒப்பந்தம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது திமுகவின் வழக்கம், அதிமுகவினருக்கு அந்தப் பழக்கம் கிடையாது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version