கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த இவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கட்சியில் சேர்ந்த சிறிது காலத்திலேயே 2021-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. இதுவே தமிழ்நாட்டு சீனியர் தலைவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு வர காரணமானது. ஆனால் அண்ணாமலையோ அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தனது பணியை சிறப்பாக செய்து வந்தார்.

அவரது துல்லியமான பேச்சுகளும், கருத்து பரிமாற்றமும், பாஜகவை இன்னும் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூண்ற வைத்தது எனலாம். 2025 வரை தமிழக பாஜக தலைவராக இருந்தவர், மறைந்த முன்னாள் அதிமுக தலைவர்களை அவதூறாக பேசியதால், அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்தது.

அதன் பிறகு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், அண்ணாமலையை கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதனால் அண்ணாமலை மாற்றப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவரானார். இருப்பினும் ஒரு சில பாஜகவினர் இன்று வரையிலும் அண்ணாமலை பக்கமே இருந்து வருகின்றனர்.

தேர்தலுக்கு பிறகும் கூட அண்ணாமலைக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால், அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் விரைவில் பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது, கட்சி தலைமையிடம் தனது விலகல் கடிதத்தை வழங்க இருப்பதாகவும், விரைவில் அவர் தனியே கட்சி தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் எனக் கூறி சென்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version