விஜய்யின் தவெக கட்சியில் சேர திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி வரும் தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்கள் தவெகவுக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறதே, தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவற்றுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; “நான் செங்கோட்டையனை பெரிதும் மதிக்கக்கூடியவன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்றுதான் சொல்ல முடியும். செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் தவெகவுக்கு செல்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. என்னை பொறுத்தவரை ஒரே கட்சிதான். மரணித்தாலும், என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படுமே தவிர, நான் யார் வீட்டின் முன்பும் சென்று காத்திருக்கமாட்டேன்.
என்னை பொறுத்தவரை புலிக்கு வாலாக இருக்கலாம். ஆனால், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அதிமுக; எலி என்பது எந்தெந்தக் கட்சிகள் என்பது உங்கள் யூகத்திற்கு உட்பட்டது. புலிக்கு வாலாக இருப்பதையே நான் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருப்பது பயன்படாத விஷயம். திமுக, தவெக என எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் எனக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. நான் என்றும் அதிமுக தான்.
அதிமுக என்பது மாபெரும் இயக்கம். தொண்டர்களை உருவாக்க முடியாது. ஆனால், தலைவர்களை உருவாக்கிவிடலாம். 25 வருடமாக எனக்கு எம்.எல்.ஏ. எனும் அங்கீகாரம் கொடுத்தவர்கள் ராயபுரம் தொகுதி மக்கள். எனவே, தொகுதி மாறுவது என்பதெல்லாம் நடக்காது. கட்சி உத்தரவிட்டால் நிச்சயம் ராயபுரம் தொகுதியில்தான் நிற்பேன். பதவிக்காகவும், பணத்திற்காகவும் பல் இளிக்கும் ஆள் நான் கிடையாது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உருவாக்கி வளர்த்த கட்சியில் சிறு துரும்பாக தொடர்ந்து செயல்படுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version