கரூரில் நடந்த தவெக மாநாட்டில் 41 உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தவெகவினர் அளித்த தவெகவின் முறையீடு இன்று பிற்பகலில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 27ம் தேதி கரூர் வேலாயுதபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தால் விஜய்யின் அடுத்த பிரச்சாரங்கள் நடைபெறுவதில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே கரூர் அசம்பாவிதம் திட்டமிட்ட சதி என தவெக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் தவெகவின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணியிடம் முறையிடுவதற்காக சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். நீதிபதியை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், “ கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது விபத்து போல் தெரியவில்லை. அது திட்டமிட்ட சதிபோல் தெரிகிறது.
பிரச்சாரத்தின் போது கற்கள் வீசப்பட்டுள்ளது, போலீசார் தடியடி நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டனர். இதை கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தவெகவின் முறையீட்டை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் கரூர் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.