செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே ஜெயலலிதா அரசு தான் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 11,42,055 பொதுமக்கள் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே, இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை முழுவதும் கடைபிடித்தது.
சோழிங்கநல்லூரில் மட்டும் 2.50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையில் 12 ஆயிரம் வாக்குகள் ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தான் ஒப்பந்த செவிலியர் பணியிடம் என்பது உருவாக்கப்பட்டது. இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அறிக்கை விடுவது ஒரு மாதிரி உள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான். 3,783 ஒப்பந்த செவிலியர்கள் இந்த அரசு வந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை இன்னும் கூடுதல் காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது தான்” என்றார்.
