பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவைதான்; ஆளுநர் மாளிகை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இந்தத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. 5 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், தேவையான மெஜாரிட்டி (118) எண்ணிக்கையை காட்டினால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் எனக் கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க தமிழக ஆளுநர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தலா இரண்டு இடங்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகளின் ஆதரவை விஜய் கோரி உள்ளார். ஆனால் இந்த கட்சிகள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், ஆளுநரின் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் செயல்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் முதன்மை பெற்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். அது தான் ஜனநாயக மரபும், நாடாளுமன்ற நடைமுறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு அரசியல் கட்சிக்கு உண்மையில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை. அது ஆளுநர் மாளிகை அல்ல. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றமே என்பதையே உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 1994ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எஸ்.ஆர்.பொம்மை வழக்குத் தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த தீர்ப்பில், சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனை அவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியலமைப்புச் சாசனக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, “இந்த அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விதியை தெளிவாக விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்” என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version