கடந்த 2024-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கைதான 19 வயது இளைஞன் கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். இதே வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் (59) என்பவர் ஏற்கனவே சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது முக்கியக் குற்றவாளிக்கு உச்சகட்டத் தண்டனை கிடைத்துள்ளது.

மரண தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ruu.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பிஞ்சுச் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் புதுச்சேரி மக்கள், இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், “எங்கள் மகளை இழந்த துயரம் ஆறாதது என்றாலும், குற்றவாளிக்குக் கிடைத்துள்ள இந்த மரண தண்டனை நீதியின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது” எனக் கண்ணீருடன் தெரிவித்தனர். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தகைய கடுமையான தீர்ப்புகள் அவசியம் என்பதை இந்த வழக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version