ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ஏற்ப, ஆவின்  பொருள்கள் விலையை தமிழக அரசு குறைக்காவிடில், பெரும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் விலையைக் குறைப்பது போல நாடகமாடியது ஊரறிந்த விஷயம்.

இந்நிலையில், தற்போது கமுக்கமாக ஆவின் நெய் விலையை உயர்த்தி, மக்களின் நலனை உறிஞ்சும் தனது கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது திமுக அரசு. உதாரணமாக ஜி.எஸ்.டி 12% ஆக இருந்த போது ஒரு லிட்டர் நெய் ரூ.700-ற்கு விற்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி 5% குறைக்கப்பட்ட பின் ஒரு லிட்டர் நெய் ரூ.656-ற்கு விற்கப்பட வேண்டிய நிலையில், அதே ரூ.700-ற்கு விற்று மக்களின் மீது நிதிச் சுமையை ஏற்றும் அறிவாலயம் அரசின் அகங்காரம் கண்டனத்திற்குரியது.

நந்தினி, அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்கள் புதிய ஜி.எஸ்.டி வரிகளுக்கு ஏற்றவாறு மூன்று மாதங்களுக்கு முன்பே பால் பொருட்களின் விலையைக் குறைத்த நிலையில் தற்போது வரை விலையைக் குறைக்காமல் மக்களுக்கு திமுக அரசு துரோகமிழைத்து வருவது ஏற்புடையதல்ல.

எனவே, புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்காவிடில், மக்கள் நலனுக்காகத் தமிழக பாஜக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version