திமுக முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை ஒரு கோடி குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது..

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுக முன்னெடுத்த ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர்; இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று தமிழ்நாடு முழுக்கவும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைத்துள்ளன.

இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன.
வரும்17 ஆம் தேதி கரூரில் நடைபெற இருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லட்சக்கணக்கான மக்களின் முன்பாக எடுக்க உள்ளார்.

அடுத்த கட்டமாக செப். 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் கழக மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற பிரகடனத்தை தமிழ்நாடு முழக்க கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் லட்சக் கணக்கான மக்கள் பங்கு பெறும் அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share.
Leave A Reply

Exit mobile version