தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளாலும், குறிவைக்கும் அரசியல் எதிரிகளாலும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தவிப்பில் உள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக கருதப்படுபவர் டி.ஜெயக்குமார். ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன போதிலும், அவரின் புகைப்படத்தையே தனது சட்டைப் பையிலும், வீட்டு வரவேற்பு அறையிலும் வைத்துள்ளார். முகநூல், எக்ஸ் பக்கத்திலும் ஜெயலலிதாவின் விசுவாசி என தன்னை அடையாளப்படுத்துவார்.
அதிமுகவில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறும்போதெல்லாம், ஜெயக்குமாரும் கட்சி மாறக்கூடும் என தகவல் வெளியாவதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், இதேபோல் தகவல் பரவியது. ஆனால் இதை உடனடியாக ஜெயக்குமார் மறுத்து விட்டார்.
ஏன் ஜெயக்குமாரை குறிவைத்து மட்டும் இதுபோல் அடுத்தடுத்து வதந்தி பரப்பப்படுகிறது என விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதுகுறித்து அவரின் நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:
ஜெயக்குமார் கட்சி மாறப் போவதாக வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி. ஜெயக்குமார் அதிமுகவின் தீவிர விசுவாசி ஆவார். ஜெயலலிதா மீது தீவிர பற்றுக் கொண்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீதும் ஜெயக்குமார் தீவிர பற்று கொண்டுள்ளார்.
எம்எல்ஏவாக இல்லாத போதிலும், தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்களிலும் தவறாமல் பங்கு பெறுவதை ஜெயக்குமார் வழக்கமாக வைத்துள்ளார். கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சென்னையில் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்படும் ஜெயக்குமாரின் செல்வாக்கை கண்டு, அவரின் அரசியல் எதிரிகள் பொறாமையில் உள்ளனர். இதனால் பணம் கொடுத்து பொய்யையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். ஜெயக்குமாரை பற்றி தெரிந்த செய்தியாளர்கள், அவர் குறித்த வதந்தியை வெளியிடுவதில்லை.
வெளி மாநிலங்களில் இருக்கும் சில இணையதளங்கள், செயலிகள் மட்டுமே இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றன. அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.
ராயபுரம் தொகுதியில் வென்று எம்எல்ஏவான ஆளும் கட்சி பிரமுகர் மீது தொகுதி மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. பதவியில் இல்லையென்றாலும், தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளில் பம்பரமாக சுழலும் ஜெயக்குமார், வருகிற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அதை தடுக்கவே ஆளும் கட்சியும், அரசியல் எதிரிகளும் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதை நிச்சயம், மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், தனது அரசியல் வாழ்வில் எத்தனையோ சவால்களை கண்டவர். இந்த சதியையும் அவர் முறியடிப்பார் என அவரின் ஆதரவாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
