தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்ததாக தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓபிஎஸ், சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கூவத்தூரில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு அந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார்.
இந்நிலையில், தவெகவில் சேர்ந்தபிறகு கோபிசெட்டிபாளையத்திற்கு முதல்முறையாக செங்கோட்டையன் இன்று வந்தார். அங்கு அவருக்கு தவெகவினரும், ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும். அதற்காகவே தவெகவில் சேர்ந்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு இணைந்து நான் பணியாற்றியுள்ளேன். எனது அனுபவத்தை வைத்து விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்.
என்னை பற்றி, யார் எது சொன்னாலும் பரவாயில்லை. கோபி தொகுதி மக்கள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார்கள்.
டிசம்பர் மாதத்தில் தவெக கூட்டணி வலுவடையும். தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சியமைக்கும். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பார்.
முதலமைச்சராகும் வாய்ப்பு முன்பு எனக்கு வந்தது. ஆனால் அந்தப் பதவியை அவருக்கு (இபிஎஸ்) விட்டுக் கொடுத்தேன். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள்.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.
