பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொள்வது தொடர்பாக, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.22) சென்னையில் நடைபெற்றது.
மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் என்பதால், இக்கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்கள் வழங்கி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சௌமியா அன்புமணி கடந்த மக்களவை தேர்தலில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் முதல்முறையாக தேர்தல் அரசியலில் களம் கண்டிருந்தார். இந்நிலையில் முதல் முறையாக பாமக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை தன்னுடைய தலைமையில் இன்று கூட்டினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “இது ஒரு குடும்ப விழா, அதனால் தான் பூக்கள் கொடுத்தும், வளையல் கொடுத்தும் உங்களை வரவேற்றோம். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அந்தவகையில், போதைப்பழக்கம் இல்லாத ஆண் பிள்ளைகளை கண்டறிந்து, நமது பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சவாலாக மாறி வருகிறது.
அதேபோல காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண் குழந்தை மற்றும் பெண்களுக்கு உடனடியாக நீதியை பெற்றுத்தர வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பிறகும், நீதிமன்றம் சென்று நீதியை பெறும் பெண்களை ‘வீராங்கனைகள்’ என கூற வேண்டும். ஏனென்றால், அவர்களது துணிச்சலே தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக உள்ளது. ஆகையால், பெண்களுக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர், “ஏன் அரைகுறையாக உடை உடுத்துகிறாய்? ஏன் இரவு நேரத்தில் நண்பருடன் சென்றாய்? தனியாக ஏன் செல்கிறாய்? என பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை நோக்கி கேள்வி கேட்பது என்பது ஒருவகையான மனநோய் போன்றது. அப்படி கேட்பவர்கள் அனைவரும் மனநோயாளிகள்” என்று ஆவேசமாக பேசினார்.
