இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) சான்றிதழ் வழங்குவதற்குத் தடை விதித்துத் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் துல்லியமான முறையில் மேல்முறையீடு செய்து வாதாட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள், இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) சான்றிதழ் வழங்குவதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தடையானது, அரசின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி, ஜனநாயக சக்திகள் தங்களது கண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் துல்லியமான முறையில் மேல்முறையீடு செய்து வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவினர் உடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களைச் சந்தித்து விரிவாகப் பேசினோம்.
இச்சந்திப்பின் போது, நீதிபதியின் தீர்ப்பில் உள்ள பிழைகள் மற்றும் சட்ட நுட்பங்களுக்கு எதிரான அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இது குறித்து முதலமைச்சர் அவர்களுடனும் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
கடந்த பக்ரீத் பண்டிகையின் போது, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுகளின் அடிப்படையில், கால்நடைகளைக் குர்பானி கொடுக்கும் சடங்குகளுக்கு அதிகாரிகள் பல இடங்களில் தடை விதித்துச் சர்ச்சையை ஏற்படுத்தினர். இந்தத் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இது குறித்தும் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், சாதி மற்றும் மதம் சார்ந்த எந்தவொரு வழக்கையும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் விசாரிக்கக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, பிற மதங்களில் இருந்து இஸ்லாத்தைத் தழுவுபவர்களுக்கான பிசிஎம் (BCM) சான்றிதழ் வழங்கும் நடைமுறையையும், இடஒதுக்கீட்டு உரிமையையும் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்..
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு புதிய சட்டக்கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றும், வரும் பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனைப் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் எனவும் தமிமுன் அன்சாரி கூறினார்.
