பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக சேருமா என்பது குறித்து டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிட்டது. இதையடுத்து, 2026 தேர்தலில் அக்கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும், அல்லது தனித்து போட்டியிடுமா என இதுவரை அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், ”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் வரை கூட்டணியில் அமமுக இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என தெரிவித்தார்.

விஜய்யின் தவெக கட்சியில் மூத்த தலைவர் செங்கோட்டையன் சேர்ந்தது குறித்த கேள்விக்கு, ”இதை செங்கோட்டையனிடம் கேட்பது தான் நன்றாக இருக்கும். அதிமுகவை இணைக்கும் முயற்சியில் நாங்கள் என்றைக்கும் ஈடுபடவில்லை. அம்மாவின் தொண்டர்களை ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அமமுகவின் நிலைப்பாடு. செங்கோட்டையன் ஒரு மூத்த நிர்வாகி, அவரது நிலைப்பாட்டை பற்றி அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடன் 40 ஆண்டுகாலமாக நட்போடு நெருங்கி பழகிய நிர்வாகிகளில் அவரும் ஒருவர். அவரை விமர்சிப்பது நன்றாக இருக்காது. அவரை பற்றி விமர்சிப்பது அவரது மரியாதையை குறைப்பதாக இருக்கும். அதனால் அவரது செயல்பாடு பற்றி விமர்சிக்க முடியாது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version