நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வருகிற ஜுலை மாதம் இந்த மக்கள் சந்திப்பு தொடங்கும் என்று பனையூர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தவெக என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார் நடிகர் விஜய். தொடர்ந்து விக்கிரவாண்டியில் கொள்கை அறிவிப்பு மாநாட்டை நடத்திக் காண்பித்தார். மேலும் கோவையில் வாக்குச்சாவடி முகவர் கருத்தரங்கு மாநாட்டை நடத்தினார். தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இதேபோன்ற மாநாடுகளை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே தான் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படத்தையும் நடித்து முடித்துக் கொடுத்து விட்டார். இனி முழுநேர அரசியலில் விஜய் களமிறங்க உள்ளார். இதன்ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.
ஜுலை 2-வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். திருச்சி அல்லது மதுரையில் இருந்து இந்த பயணத்தை தொடங்க உள்ளாராம். தொடர்ச்சியாக 42 நாட்களுக்கு தென்மாவட்டங்கள் முழுவதும் சென்று மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். எந்தெந்த வழித்தடத்தில் பயணித்தால் சிறப்பாக இருக்கும் என்பது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விஜய் அறிக்கை கேட்டுள்ளாராம். அதேபோன்று சுற்றுப்பயணத்திற்காக எம்ஜிஆர் பாணியில் சிறப்பு வேன் ஒன்று தயாராகி வருகிறதாம்.
அதேபோன்று நமது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும், கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருந்தால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளாராம். நகரங்களைத் தாண்டி கிராமங்களிலும் விஜயின் குரல் ஒலிக்க இருப்பது அக்கட்சி நிர்வாகிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்..