முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எவ்வித அரசியலும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக திமுக, அதிமுக, பாஜக உட்பட அனைத்து கட்சியினரும் முழுவீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் இருமுறை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
முன்னதாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்காததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவர் நிச்சயம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 31-ம் தேதி ஒரே நாளில் காலை நடைபயிற்சியின் போதும், மாலை வீட்டிற்கு சென்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். அதனால் ஓபிஎஸ் நிச்சயம் திமுகவில் இணையப் போகிறார் என்ற செய்தி பரவியது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட பதிவில்,
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் இல்லை. மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சரை நேரில் சென்று நலம் விசாரித்தேன். மேலும், மு.க.முத்து மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவே சென்றேன். இந்த சந்திப்பை அரசியலாக்குவது நாகரீகமற்ற செயல். என்னுடைய மனைவி, தாயார் இறந்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நான் திமுகவில் இணைப்போவதாகவும், கூட்டணி வைக்கப்போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர். முதலமைச்சருடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர். முதல்-அமைச்சரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர்.
2026ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலேயே முதல்-அமைச்சரை சந்தித்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. நான் எங்கிருந்தாலும் மக்களின் உரிமை, நலன் என்று வந்தால் ஜெயலலிதா வழியில் செயல்படக்கூடியவன்” என கூறியுள்ளார்.
