திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்வதற்கான காரணத்தை அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கட்சியிடம் 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி கூறியுள்ளார்.
மதுரையில் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய “கருப்பு ரட்சகன்” நாவல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், சரவணன், நடிகர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய திருமாவளவன், “தேர்தல் களத்தில் நான் எடுக்கும் சில முடிவுகள் வெளியே இருப்பவர்கள் பார்வையில் சில நேரங்களில் பிழையாக தெரியலாம். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த போது நான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததை சிலர் இன்றும் விமர்சிப்பதை பார்க்கிறேன்.
வேங்கைவயல் உள்ளிட்ட பல பிரச்சனைகளின் போது எனக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தது உண்டு. இன்றைக்கும் வேங்கைவயலுக்கு திருமா என்ன செய்து விட்டார்? என்ற கேள்வி உண்டு. சம்பவம் நடந்த இரண்டாம் நாளே போராட்டம் அறிவித்து, உடனடியாக நடத்தினேன். பத்துக்கும் மேற்பட்ட முறை முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளரிடம் நான் பேசினேன்.
கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து மக்களை மறந்து தனி நபராக என்னுடைய நலன் குறித்து நான் இதுவரை சிந்தித்தது இல்லை. அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததும் இல்லை. இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக எங்களை போல் போராடியவர்கள் யாருமில்லை. கருணாநிதி காலத்திலும் கூட்டணியில் இருந்த போதும் அவருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில்லாமல், அதிமுக தலைவர்களோடு இயங்கியிருக்கிறேன்.
மதுரையை சனாதனமயமாக மாற்ற பார்க்கிறார்கள். சாதி சங்கங்களை அணுகி, சாதி உணர்வுகளை திட்டமிட்டு வளர்க்கிறார்கள். ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல்.
நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலை பற்றி பேசுவேன். சீட் எத்தனை பெறுகிறேன் என்பது என் பிரச்சினையல்ல. சீட் எண்ணிக்கை மாறுவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் போய் அமர போவதில்லை. பதவி எனக்கு பெரிதல்ல. 10 சீட் கூடுதலாக வாங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. சீட் தான் வேண்டும் என்றால் அதை அதிகமாக தருகிற கட்சியோடு போய் சேரலாம் அல்லவா? இவ்வளவு விமர்சனங்களுக்கு பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணமே பதவி ஆசை இல்லாததே காரணம்.
பெரியாரை வெளிப்படையாக, பிராமண கடப்பாறையை கொண்டு இடிப்போம் என்று சொல்லும் நிலை வந்திருக்கிறது. வலதுசாரிகளின் ஆதிக்கத்தால் இந்த விளைவுகள் உருவாகி வருகின்றன. சகோதரத்துவத்தை தகர்க்க பார்க்கிறார்கள். உண்மையான தமிழ் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிர்ப்பது தான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிர்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன் வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம்” என்று திருமாவளவன் எம்பி பேசினார்.
