திருச்சியில் இன்று(14.06.2025) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த பேரணி, டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதனையொட்டி வழிநெடுங்கிலும் கட்சி கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.
எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை நிறுவுவோம்.” என சூளுரைத்துள்ளார்.