த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது ஜூலை மூன்றாம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அதே மனுவில், யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் சார்பில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு விசாரணைக்கு வந்த போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் எந்த தொடர்பும் இல்லை என்பது பார்த்தாலே தெரியும் என்றும் விளம்பர நோக்கத்திற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் இடைக்கால மனு மீது ஜூலை மூன்றாம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
