தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25 அன்று மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி எனும் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான பந்தல்கால் நேற்று நடப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் கடிதம் அளித்துள்ளார்.
இம்மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை காவல்துறை கேட்கவுள்ளது. யார் தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது, வேறு வி.ஐ.பி.க்கள் யாரும் பங்கேற்கின்றனரா, தொண்டர்கள் எவ்வளவு பேர் மாநாட்டுக்கு வரவுள்ளனர், எங்கிருந்தெல்லாம் வருவர், அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான நிறுத்துமிடம் உள்ளிட்டவை அடங்கிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகளை மாவட்ட காவல்துறை கேட்கவுள்ளது.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இதுவரை எவ்வித கூட்டமும் நடத்தப்படாத புது இடத்தை மாநாட்டுக்காக தேர்வு செய்துள்ளனர். அங்கு 200 ஏக்கர் பரப்பளவில் மாநாடும், அதன் எதிரேயுள்ள 300 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தமும் அமைக்க கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் போது போக்குவரத்துக்கு ஏற்படும் சிக்கல்கள், விஜய் பயணிக்கும் வழிகள், அவருக்கான பாதுகாப்பு, மாநாட்டுக்கு வருபவர்கள் அவ்விடத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் மாவட்ட காவல்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த ஆய்வு மற்றும் காவல்துறையின் கேள்விகளுக்கு தவெக பொதுச் செயலாளர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் ஆராய்ந்து மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்